நிபோங் தெபால், ஜனவரி-3 – டிசம்பர் 21-ஆம் தேதி வீடுடைத்துத் திருடியதன் பேரில் 5 நண்பர்கள் இன்று பினாங்கு, நிபோங் திபால் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் தென் செபராங் பிறை, தாமான் பஞ்சூர் இண்டாவில் (Taman Panchor Indah) வீடு புகுந்து, 31 வயது ஆடவருக்குச் சொந்தமான 2 மடிக்கணினிகளையும் ஒரு tablet-டையும் கும்பலாகத் திருடியதாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
எனினும், ஐவரும் அக்குற்றச்சாட்டை மறுத்து விசாரணைக் கோரினர்.
இதையடுத்து தலா 5,000 ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஐவரையும் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.
ஜனவரி 24-ங்காம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அதே நீதிமன்றத்தில் 5 நண்பர்களில் இருவருக்கு எதிராக மேலுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
திருட்டுப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டை ஒருவர் மறுத்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான 2,500 ரிங்கிட் மதிப்புள்ள செம்பினால் ஆன விளக்குக் கம்பத்தைத் திருடியக் குற்றத்தை இன்னொருவர் ஒப்புக் கொண்டார்.
அவருக்கு நீதிமன்றம் 5 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.