கோலாலம்பூர், செப்டம்பர் -4, அடிக்கடி நிகழும் நில அமிழ்வு சம்பவங்களால், கோலாலம்பூர் Taman Keramat Permai PKNS அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களின் தூக்கத்தை இழந்து பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக கனமழையின் போது, பாதுகாப்புக் குறித்து அவர்கள் பெரிதும் கவலைப்படுகின்றனர்.
ஆகக் கடைசியாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி, D புளோக்கின் கீழ் தளத்தில் 2 மீட்டர் ஆழத்திற்கு நிலம் உள்வாங்கியது.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என குடியிருப்பாளர்கள் இப்படியே அச்சத்தில் வாழ முடியாது.
எனவே, அப்பிரச்னைக்கு நீண்ட கால தீர்வு எட்டப்பட வேண்டுமென, குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் சுலைமான் சாப்புவான் (Sulaiman Sapuan) வலியுறுத்தினார்.
பகுதி வாழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தைக் கண்டறிய, நில அமைப்பு மீதான விரிவான ஆய்வும் அதிலடங்கும் என்றார் அவர்.
30 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில், இதற்கு முன் ஆக மோசமாக 90-ஆம் ஆண்டுகளில் C புளோக் முழுவதுமாக இடிக்கப்பட்டு, அருகிலுள்ள நிலத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டது.
அதே சமயம் 2019-ல் நில அமிழ்வினால் F புளோக்கில் வெடிப்பு ஏற்பட்டு, பாதுகாப்புக் கருதி 222 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டது குறிப்பிடத்தக்கது.