வாஷிங்டன், நவம்பர்-23, காசா முனையில் போர்க் குற்றம் புரிந்ததாகக் கூறி கைது ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை, அவ்வளவு எளிதில் நீதிமன்றத்தில் நிறுத்தி விட முடியாது என்றே தோன்றுகிறது.
அதைத் தடுப்பதற்கு இஸ்ரேலின் நெருங்கியப் பங்காளியான அமெரிக்கா தன்னால் ஆன அனைத்தையும் நிச்சயம் செய்யும்.
தொடக்கக் கட்டமாக, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நெத்தன்யாஹுவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்த தலைமை வழக்கறிஞர் கரிம் கான் (Karim Khan) இதில் பலிகடா ஆகலாம்.
ஜனவரி இறுதியில் டோனல்ட் டிரம்ப் மீண்டும் அதிபரானதும், முதல் வேலையாக கரிம் கானுக்கு அவர் தடை விதிக்கக்கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது ஆணை வெளியிட்டதற்காக பயங்கர பதிலடிக்கு ICC தயாராக வேண்டுமென, டிரம்ப் நிர்வாகத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள Mike Waltz-சும் எச்சரித்துள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க, நெத்தன்யாஹூ பிரிட்டனில் கால் வைத்தால் அவர் கைது செய்யப்படலாம் என, அந்நாட்டு அரசாங்கம் கோடி காட்டியுள்ளது.
நேரடியாகக் கூறா விட்டாலும், பிரிட்டன் ஒப்புக் கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு சட்டத்திட்டங்களுக்கு ஏற்பவே அரசின் நடவடிக்கை அமையுமென பிரிட்டன் பிரதமரின் பேச்சாளர் சொன்னார்.
அப்படிப் பார்த்தால், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய 1998 ரோம் பிரகடனத்தில் பிரிட்டனும் கையெழுத்திட்டுள்ளது.
ICC கைது ஆணை வெளியிட்டால் பிரிட்டனில் அது அமுல்படுத்தப்பட வேண்டுமென, 2001-ல் பிரிட்டன் வெளியிட்ட ஆணையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இவ்வேளையில் நெத்தன்யாஹுவை தாங்கள் கைதுச் செய்ய வாய்ப்பில்லை என ஜெர்மனி கூறிவிட்டது.
இஸ்ரேலுடன் ஜெர்மனி கொண்டுள்ள ‘Nazi’ உறவு நீண்ட நெடியது என்பதால், அதனைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டோம் என அதன் அரசாங்கப் பேச்சாளர் சொன்னார்.