Latestஉலகம்

நேரடி விமானச் சேவை, வர்த்தக தொடர்பை அதிகரிக்க இந்தியா – சீனா இணக்கம்

புதுடில்லி, ஆக 20 – நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது , வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்தியாவும் சீனாவும் இணக்கம் கண்டுள்ளன.

2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட உறவுகளை மீண்டும் சரிசெய்துகொள்வதற்கு அந்த இரண்டு அண்டை நாடுகளும் தற்போது முன்வந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கையின் பின்னணியில், ஆசியாவின் அந்த இரண்டு பொருளாதார ஜம்பாவான்கள் எச்சரிக்கையுடன் உறவுகளை வலுப்படுத்தி, உயர் மட்ட இருதரப்பு வருகைகளை தொடர்கின்றன.

இரு நாடுகளும் மூன்று நியமிக்கப்பட்ட இடங்களில் எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறப்பது மற்றும் விசாக்களை எளிதாக்குவது என முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் (Ajit Doval) பல ஆண்டுகளாக நிலவும் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 24வது சுற்று பேச்சுவார்த்தைக்காக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டதன் முடிவில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

2020 ஆம் ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவை மீண்டும் தொடங்குவதற்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எல்லைப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் இமயமலை எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்பப் பெறுவது, எல்லைகளை நிர்ணயிப்பது மற்றும் அது தொடரபான பிரச்னைகள் இடம்பெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!