
புத்ராஜெயா, ஜூலை-12 – நாட்டில் இணையப் பகடிவதை உள்ளிட்ட பகடிவதை சம்பவங்களை மேலும் கடுமையாகவும் விரிவாகவும் கையாள உதவும் வகையில், 2 சட்டத் திருத்தங்கள் நேற்று தொடங்கி அமுலுக்கு வந்துள்ளன.
2025 குற்றவியல் சட்டத் திருத்தம், 2025 குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தம் ஆகியவையே அவ்விரு சட்டங்களாகும்.
இதில் குற்றவியல் சட்டத் திருத்தத்தில் தான், “ஈஷா விதி” (Esha Clause) என்ற புதியப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இணையப் பகடிவதைக் காரணமாக கடந்தாண்டு மத்தியில் தற்கொலை செய்துகொண்ட சமூக ஊடகப் பிரபலம் ஏஷா எனும் ராஜேஸ்வரி அப்பாவு என்பவரின் நினைவாக அது உருவாக்கப்பட்டுள்ளது.
பகடிவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதை இப்புதிய ‘ஏஷா விதி’ நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த இரு சட்டத் திருத்தங்களும் கடந்தாண்டு டிசம்பர் 10-ஆம் தேதி மக்களவையிலும், டிசம்பர் 16-ஆம் தேதி மேலவையிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
இத்திருத்தங்கள், மிரட்டலான, அவமதிப்பான, அல்லது அவமரியாதையான தகவல்தொடர்பு செயல்களைக் குற்றமாக வகைப்படுத்தும் வகையில் 507B முதல் 507G வரையிலான புதிய பிரிவுகளை கொண்டு வருகின்றன.
இதன் வழி, பீதியூட்டும் அல்லது மன அழுத்தம் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் சமூக ஊடக குற்றங்கள் மற்றும் தகவல் தொடர்பு குற்றங்களுக்கு இனி கடும் தண்டனைகள் விதிக்கப்படும்.
இந்த சட்டங்கள், குறிப்பாக இணையப் பகடிவதையிலிருந்து, பள்ளி மாணவர்கள், பதின்ம வயதினர் உள்ளிட்டோரை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.
அனுமதியில்லாமல் தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் செயலும், தற்போது கடுமையான குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது; இக்குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இத்திருத்தங்கள் யாவும், நடப்புச் சட்டங்களில் காணப்படும் பலவீனங்களை ஆராய்ந்த பிறகே மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, மனநல பாதிப்பு மற்றும் உளவியல் மிரட்டல்களைச் சமாளிக்க தற்போது உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை; எனவே இணையத்தில் பலவகை உளவியல் மற்றும் உணர்ச்சிப் பாதிப்புகளுக்கு எதிராக சட்ட ரீதியாக வலிமையான பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதற்காகவே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக, பிரதமர் துறையின் சட்ட விவகாரங்கள் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.