லாஹாட் டத்து, செப்டம்பர் -15 – சபா, லாஹாட் டத்துவில் உள்ள மருத்துவமனையொன்றில் இரசாயன உடற்கூறு பிரிவின் தலைவராக இருந்த Dr Tay Tien Yaa என்பவர், பணியிட பகடிவதையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி தனது வாடகை வீட்டில் அவர் இறந்து கிடந்ததாக, அவரின் தம்பி என்பவர் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தான் என் அக்கா அம்மருத்துவமனைக்கு மாற்றலாகி சென்றார்.
எனினும் வேலைக்கு அப்பாற்பட்டு அவருக்குப் பணிச்சுமை அங்கு அதிகம்.
உடற்கூறு துறையைத் தலைமையேற்பதே பெரிய வேலை; அது போதாதென்று உபகரணங்களைப் பரிசோதிப்பது, அடிக்கடி கூட்டங்களில் பங்கேற்பது, அறிக்கைத் தயாரிப்பது என கூடுதல் வேலைகள் கொடுக்கப்பட்டன.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் ஆளானதாக அவரின் தம்பி தெரிவித்துள்ளார்.
அதோடு துறைத் தலைவரும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தொழிலாளர்களை மோசமாக நடத்தினார்.
அக்காவின் மன உளைச்சல் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால் நிச்சயம் எதையாவது செய்திருக்க முடியுமென தம்பி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையில் அச்செய்தியை படித்து தாம் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக செனட்டர் Dr லிங்கேஷ்வரன் அருணாச்சலம் கூறியுள்ளார்.
சிறந்த எதிர்காலத்தை கொண்டிருந்த ஓர் இளம் மருத்துவரை நாம் இழந்துள்ளோம்.
பணியிடங்களில் நடக்கும் பகடிவதைகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க, முந்தைய அரசாங்கத்தின் கீழ் பணிக் குழு அமைக்கப்பட்டது.
அதன் ஆய்வறிக்கை என்னவாயிற்று? பகடிவதைப் பிரச்சைக்கு என்ன தான் தீர்வு? இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகிறோம் என Dr லிங்கேஷ்வரன் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே சுகாதார அமைச்சர், சுகாதார தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் தீவிர கவனம் செலுத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.