சன்வேய், ஜனவரி-2, சிலாங்கூர், பண்டார் சன்வேயில் ‘Pinkfish’ புத்தாண்டு வரவேற்புக் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றப் பிறகு நால்வர் உயிரிழந்த சம்பவத்தை போலீஸ் விசாரித்து வருகிறது.
2 ஆண்கள் 2 பெண்கள் என நால்வரின் மரணம் குறித்து மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் 4 போலீஸ் புகார்களைச் செய்திருப்பதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) சொன்னார்.
சவப்பரிசோதனை முடிந்து விட்டது; இந்நிலையில் மரணத்திற்கான காரணம் ஆய்வுக் கூட அறிக்கைக் கிடைத்தப் பிறதே தெரிய வருமென்றார் அவர்.
தொடக்கக் கட்ட விசாரணையில் அந்நால்வரின் உடல்களிலும் வெளிப்புறக் காயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
தற்போதைக்கு திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், குற்ற அம்சங்களோ அல்லது நச்சுணவுப் பாதிப்போ இருந்தற்கான சாத்தியங்களை ஆராய விசாரணைகள் தொடருகின்றன.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பின், முன்வந்து விசாரணைக்கு உதவுமாறும் டத்தோ ஹுசேய்ன் கேட்டுக் கொண்டார்.