
பத்து மலை, மே-2, மே முதல் நாளான நேற்று பத்து மலை திருத்தலத்தில் “கந்த சஷ்டி கவசம் பாராயணம்” நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஆதரவில், டத்தோ என். சிவகுமார் தலைமையிலான டி.எஸ்.கே குழுமமும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவும் அதனை இணைந்து நடத்தின.
140 அடி முருகன் சிலை அடிவாரத்தில் காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டோடு நிகழ்ச்சி தொடங்கியது.
தமிழகத்திலிருந்து வந்திருந்த ஆன்மீக சொற்பொழிவாளர் விஜயகுமார், அருணகிரிநாதர் மற்றும் முருகன் கதைகளோடு, கந்த சஷ்டி கவசத்தின் நன்மைகள் பற்றியும் பேசினார்.
இடையில், கோவையிலிருந்து அழைத்து வரப்பட்ட ஸ்ரீ வல்லப்பை கணபதி காவடிக் குழுவினரின் காவடி சிந்து ஆட்டமும் இடம் பெற்றது.
முக்கிய நிகழ்வான ‘கந்த சஷ்டி கவச பாராயணத்தை’ விஜயகுமார், கவிமாறன் மற்றும் உள்ளூர் பாடகர் சந்தேஷ் இணைந்து பாடினர்.
இவ்வேளையில், முதன் முறையாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு பேராதரவு கிடைத்திருப்பதால், அடுத்தாண்டு இதை விட சிறப்பாக நடத்தப்படுமென, கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான் ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.
தொழிலாளர் தின பொது விடுமுறை என்பதால், முருக பக்தர்கள் திரளாக வந்து இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பக்தர்களுக்கு பன்னீர் வழங்குதல், மேற்குகையில் வேலாயுதப் பெருமானுக்கு அபிஷேகம், என தொடர்ந்த நிகழ்வு அன்னதானத்துடன் நிறைவுப் பெற்றது