
வாஷிங்டன், ஏப்ரல்-13 உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விதித்துள்ள ‘பரஸ்பர’ வரியிலிருந்து, விவேகக் கைப்பேசிகள், மடிக் கணினிகள், கணினி சில்லுகள் மற்றும் மின்னியல் உபரிபாகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் அனைத்து மின்னியல் பொருட்களுக்கும் அது பொருந்துமென, அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுரங்கத் துறை வெளியிட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 5 முதல் அமெரிக்காவுக்குள் நுழைந்த அல்லது சரக்குக் கிடங்கிலிருந்து வெளியேறியப் பொருட்களுக்கு இந்த வரி விலக்கு கிடைக்கும்.
சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு குறைந்தது 145 விழுக்காட்டு வரியை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அதிரடி காட்டிய மறுநாள், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
hard drive எனப்படும் வன் தட்டுகள் மற்றும் கணினி செயலிகள் உட்பட விலக்கு அளிக்கப்பட்ட பல தயாரிப்புகள் பொதுவாக அமெரிக்காவில் தயாரிக்கப்படுவதில்லை.
எனவே, பிரபலமான உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கான அமெரிக்கப் பயனர்கள் மீதான செலவு தாக்கத்தைக் குறைப்பதற்கே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்கான ஒரு வழியே இந்த கூடுதல் வரி விதிப்பு என டிரம்ப் குறிப்பிட்டாலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நிச்சயம் பல ஆண்டுகள் ஆகும்.
‘பரஸ்பர’ வரி என்ற பெயரில் தனது அதிரடி அறிவிப்பால் உலகச் சந்தையே ஆட்டம் கண்டதால், சீனா தவிர்த்து மற்ற 75 நாடுகளுக்கும் அதனை 90 நாட்களுக்கு டிரம்ப் இடைநிறுத்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.