
கோலாலம்பூர், மார்ச்-25- மலேசிய இந்தியத் தொழில்முனைவோர்களின் மேம்பாட்டுக்காக, சிறு நடுத்தர வணிக மேம்பாட்டு வங்கியான SME Bank, ‘வணிகம் கடனுதவித் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
வணிக விரிவாக்கத்திற்கு அவசியமான இயந்திரங்கள், உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் பணி மூலதனத்தை வாங்க ஏதுவாக, 50 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இக்கடனுதவித் திட்டம் உதயமாகியுள்ளது.
250 விண்ணப்பத்தாரர்கள் வரை பயனடையும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
3.5 முதல் 6 விழுக்காடு வரையிலான குறைந்த வட்டி விகிதத்தில் 100,000 ரிங்கிட்டிலிருந்து 300,000 ரிங்கிட் வரையில் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
நடப்பிலுள்ள அல்லது புதிய SME Bank வாடிக்கையாளர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியுமென்றார் அவர்.
இன்று தொடங்கி 2027-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை சிறு நடுத்தர வியாபாரிகள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளோர் SME Bank-கின் அதிகாரப்பூர்வ இணையத் தளம் வாயிலாகவோ அல்லது நாடு முழுவதுமுள்ள அதன் கிளை அலுவலகங்களுக்குச் சென்றோ விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க முடியும்.
அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, இன்றைய அதன் அறிமுக விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரமணன் கூறினார்.
அந்நிகழ்வில் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ கைருல் சாய்மி டாவுட், SME Bank-கின் தலைமை செயலதிகாரி டத்தோ Dr மொஹமட் ஹர்டீ இப்ராஹிம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.