
கோலாலம்பூர், நவம்பர் 22-2025 EF ஆங்கிலப் புலமை குறியீட்டின் (EF EPI) படி, மலேசியர்கள் ஆசியாவிலேயே முதலிடத்தைப் பிடித்து ஆங்கில மொழியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
EF EPI என்பது 123 நாடுகள் மற்றும் வட்டாரங்களில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டிராதவர்களில் 2.2 மில்லியன் பேரின் ஆங்கில மொழித் திறனை மதிப்பிடும் மிகப்பெரிய அனைத்துலகக் கணக்கெடுப்பாகும்.
இவ்வாண்டுக்கான அப்பட்டியலில் மலேசியா முதலிடத்தையும், பிலிப்பின்ஸ் இரண்டாமிடத்தையும், ஹோங் கோங் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன.
இதுவே உலகளவில் பார்த்தால், மலேசியா 2 இடங்கள் முன்னேறி 24-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இவ்வேளையில், ஆசியாவிலேயே உயர் ஆங்கில புலமைக் கொண்ட நகரமாக கோலாலம்பூர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூருக்கு இம்முறை 588 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன; கடந்தாண்டு அது 584 ஆக இருந்தது.
மலேசியாவிலேயே ஆங்கில புலமையில் முன்னணி வகிக்கும் வட்டாரமாக பினாங்கு முதலிடத்தில் உள்ளது.
முதலிடத்தில் உள்ள நகரமாக குவாந்தான் கவனத்தை ஈர்க்கிறது.
நாட்டில், 26 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்களே மிக உயர்ந்த அளவிலான ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்துவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.



