கோலாலம்பூர், செப்டம்பர் 30 – மலேசியக் கல்வி அமைச்சு, பானசோனிக்குடன் இணைந்து ‘Rakan Bersih Ceria’ எனும் முகாமின் வாயிலாக நாட்டிலுள்ள பள்ளிக் கழிவறைகளின் தூய்மையை மேம்படுத்துவதற்கான முதல் ‘பிடெட்’ முயற்சியைத் தொடங்கியுள்ளது.
‘பிடெட்’ என்பது ஆசனவாய் பகுதியைக் கழுவுவதற்குத் தண்ணீரைத் தெளிக்கும் சாதனமாகும்.
அவை கழிப்பறை இருக்கையுடன் இணைக்கப்படலாம் அல்லது தனித்தனி சாதனங்களாக இருக்கலாம்.
கழிப்பறை காகிதத்தை விட ‘பிடெட்டுகள்’ மிகவும் முழுமையான மற்றும் சீரான சுத்தத்தையும், மற்றும் துர்நாற்றத்தையும் குறைக்கும்.
அவ்வகையில், இந்த முன்முயற்சி மலேசியாவில் பள்ளிகளில் கழிப்பறை சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே நல்ல சுகாதாரப் பழக்கங்களை வழங்க பானாசொனிக் ‘பிடெட்’ வசதிகளை நிறுவவுள்ளது.
நாட்டிலுள்ள பள்ளிகளில் கழிவறைகள் சீர்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கிய ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாகக் கல்வி அமைச்சின் கல்வி வளங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் இயக்குநர் அனிஷா கமருல்ஜமான் (Aniza Kamarulzaman) தெரிவித்தார்.
இன்று அதிகாரப்பூர்வமாகத் தலைநகரில் தொடக்கம் கண்ட இந்த ‘பிடெட்’ திட்டத்தின் தொடக்க விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.