
அலோஸ்டார், மே 4 -பாலிங் மாவட்டத்தில், ஒரு போலி கைத்துப்பாக்கி உட்பட ஐந்து துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக, மெக்கானிக் மற்றும் பட்டறை உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
45 வயதான அந்த உள்ளூர்வாசி, மே 1 ஆம் தேதி நள்ளிரவு மணி 12.30 க்கு சம்பந்தப்பட்ட பட்டறையில் கெடா குற்றப்புலனாய்வுத்துறையின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரால் கைது செய்யப்பட்டதாக கெடா போலீஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா (Datuk Adzli Abu Shah) தெரிவித்தார்.
இந்தச் சோதனையில், 2 கைத்துப்பாக்கிகள், இரண்டு தோட்டாக்கள், பழுப்பு நிற மரப் பிடிகளுடன் கூடிய இரண்டு கருப்பு நிற நீண்ட துப்பாக்கிகள் மற்றும் 17 தோட்டாக்கள், தைவானில் தயாரிக்கப்பட்டது என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஒரு கருப்பு நிற போலி கைத்துப்பாக்கி, காலி தோட்டாக்கள், 130 இரும்புக் குண்டுகள், ஒரு காற்றழுத்த கருப்பு நிற கைத்துப்பாக்கி உறை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக அட்லி அபு கூறினார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பயன்படுத்தும் அறிகுறி கொண்டிருப்பதும் அவரது சிறுநீர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.



