
ஜோகூர் பாரு, ஜூன்-20 – ஜோகூர், பண்டார் டத்தோ ஓன் (Bandar Dato’ Onn) பகுதியில், உணவகம் ஒன்று திறக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக, அது மர்ம நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவிருந்த புதிய ‘நாசி கண்டார்’ உணவகம் ஒன்றின் மீது, நேற்று அதிகாலை மர்ம நபர்கள் இருவர் எரிபொருள் மற்றும் சிவப்புச் சாயத்தைத் தெளித்து தீ வைத்துள்ளனர்.
இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 3.34 மணியளவில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த இருவர் இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.
இந்தத் தீ விபத்தினால் உணவகத்திற்கு சுமார் 2 லட்சம் ரிங்கிட் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவகத்தின் இன்றையத் திறப்பு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இலவச உணவு வழங்க உரிமையாளர் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



