
கோழிக்கோடு (கேரளா), ஜனவரி-21-தென்னிந்திய மாநிலம் கேரளாவில் பேருந்தில் ஆண்கள், பெண்களை உரசாத வகையில் தங்களை அட்டைப் பெட்டியால் மூடி கொண்டு பயணம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
“ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்” என்ற நூதனக் கோரிக்கையுடன், meme வீடியோக்கள் மற்றும் பேரணி வழியாக விழிப்புணர்வையும் அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
பேருந்து நடத்துநரே கூட அட்டைப் பெட்டியை மாட்டிக் கொண்டு பயணம் செய்து, ஆண்களுக்கு தனி ஆணையம் வேண்டும் என வலியுறுத்துகிறார்.
கோழிக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடந்த ஒரு துயரச் சம்பவத்துக்குப் பிறகு இந்த ‘அட்டைப் பெட்டி பயணம்’ உருவானது.
42 வயது தீபக் என்பவர், பேருந்தில் பயணம் செய்யும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு பெண் செல்ஃபி வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோ வைரலான நிலையில், மன உளைச்சலால் தீபக் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் வைரலான வீடியோவில் தீபக் தவறு செய்ததாகத் தெரியவில்லை, மாறாக பிரபலம் அடையவும் ‘likes’-களை குவிக்கவுமே அப்பெண் இப்படிச் செய்தார் என சமூக ஊடகங்களில் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன.
அப்பெண்ணின் செயலால் அப்பாவி ஆடவரின் உயிர் பறிபோயிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துப்பட்டது.
இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக அப்பெண் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபக்கின் மரணத்தால் பேருந்தில் ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்ற குரல் கேரளாவில் வலுப்பெற்று, தேசிய அளவிலும் கவனம் பெற்று வருகிறது.



