
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-26 – பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் கூரையில் 4 நாட்களாக ஒரு நாய் சிக்கிக் கொண்டு தவிப்பது பொது மக்கள் குறிப்பாக விலங்கின ஆர்வலர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
வில்லா கெஜோரா அடுக்குமாடி குடியிருப்பின் கூரையில், 17-வது மாடியில் தனியே அமர்ந்திருக்கும் அந்த greyhound நாய், நகருவதற்கு மிகவும் பயந்து அங்கேயே தவிக்கிறது.
அதனைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில், தன்னார்வலர்கள் இரும்புக் கதவை வெட்டி, அதற்கு தப்பிச் செல்லும் பெரிய வழியை உருவாக்கினர்.
அதோடு நாயை ஈர்க்கும் வகையில் பொரித்த கோழி, வறுத்த கோழி, KFC போன்ற சுவையான உணவுகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல முயற்சிகளுக்குப் பிறகும் நாய் இன்னும் தயக்கத்துடன் உள்ளே வர மறுக்கிறது.
இருப்பினும் தன்னார்வலர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த முயற்சியில் முழு சமூகமும் ஒன்றிணைந்து, நாய் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி, நாயை மீட்கும் பணி இன்னமும் தொடருகிறது.
தீயணைப்பு-மீட்புப் படையினர், 4PAWS எனப்படும் பினாங்கு விலங்குகள் நலச் சங்கம், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அறைத்துலக உதவி அமைப்பான IAPWA ஆகியவையும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.