
கோலாலம்பூர், மார்ச் 10-பினாங்கில் 42 வீடுகளை உடைத்துக் கொள்ளையிட்ட 8 பேரடங்கிய கும்பலை போலீஸார் முறியடித்துள்ளனர்.
2024 முதல் 2025 அக்டோபர் வரை செயல்பட்ட இந்தக் கும்பல், சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நகைகள், மின்சாதனங்கள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளது.
Op Shadow சிறப்புச் சோதனையில் 22 முதல் 35 வயதுக்குட்பட்ட அந்த 8 பேரும் கைதானதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
இவர்களில் ஐவர் கடந்த மாதம் SOSMA சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டனர்.
மற்ற மூவரும் ஏற்கனவே சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்தக் கும்பலை வழிநடத்தியவர் 27 வயது இளைஞர் என்ற அதிர்ச்சித் தகவலையும் குமார் வெளியிட்டார்.
அனைத்து சந்தேக நபர்களும் இன்று பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.



