Latestமலேசியா

புக்கிட் பிந்தாங்கில் பொது வாகன நிறுத்துமிடங்களுக்கு ‘கட்டாயமாக’ 10 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கும் கும்பல்

கோலாலம்பூர், ஜூலை-14- கோலாலாம்பூர், புக்கிட் பிந்தாங் மற்றும் ஜாலான் அலோர் பகுதிகளில் வாகன நிறுத்துமிட கட்டணம் என்ற பெயரில் வெளிப்படையாகவே 10 ரிங்கிட் வசூலிக்கப்படுவது அம்பலமாகியுள்ளது.

அவை தனியார் நிறுத்துமிடங்கள் கூட அல்ல, மாறாக பொது வாகன நிறுத்துமிடங்கள்; அவற்றுக்கே இந்த உள்ளூர் ஆடவர் கும்பல் கட்டணம் வசூலிக்கிறது.

சட்டவிரோதமாக அவ்விடங்களை ஆக்கிரமித்து, கட்டணம் செலுத்துமாறு வாகனமோட்டிகளை அக்கும்பல் கட்டாயப்படுத்துகிறது; மறுப்பவர்களை மிரட்டுகிறது.

ஹரியான் மெட்ரோ மலாய் நாளிதழ் நிருபர்கள் ஆள்மாறாட்டம் செய்த போது அக்கும்பலின் யுக்தி அம்பலமானது.

கேட்டதற்கு, வாகன நிறுத்துமிடங்களை வேறு யாரும் எடுத்துக் கொள்ளாமலிருப்பதை உறுதிச் செய்யவே, அங்கு ‘பாதுகாப்பில்’ ஈடுபட்டு வருவதாக ஓர் ஆடவர் கூறியுள்ளார்.

“வெறும் 5 மற்றும் 10 ரிங்கிட் கட்டணங்களை மட்டுமே வசூலிக்கிறோம்; ஆனால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாகனங்களை அங்கே நிறுத்தி வைக்கலாம்” என அவர் சொன்னார்.

“நாங்கள் யாருக்கும் பிரச்னையை ஏற்படுத்தவில்லை; பொருளாதாரச் சூழலில் இதுவே எங்களின் வருமானத்திற்கான வழி” என அவர் கூறிக் கொண்டார்.

எனினும், கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL-லின் வாகனம் அப்பகுதியில் ரோந்துசெல்வதைக் கண்டதும், அவர்கள் அங்கிருந்து உடனடியாக நகர்ந்து விட்டனர்.

இதுவே, அவர்கள் அங்கு சட்டவிரோதமாக இயங்கி வருவதற்கு அடையாளமாகும்.

அமுலாக்க நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித் திரிகிறார்கள்; பாதுகாப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாதது குறித்து பொது மக்கள் கவலையை எழுப்பியுள்ளனர்.

முன்னதாக, புக்கிட் பிந்தாங்கில் வாகன நிறுத்துமிடம் எனக் கூறி 2 ஆடவர்கள் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதைக் காட்டும் ஒரு வீடியோ வைரலானது.

இதையடுத்து போலீஸாரின் துணையுடன் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதை DBKL உறுதிப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!