
புத்ராஜெயா, ஏப்ரல்- 5 – மாபெரும் இசைநிகழ்ச்சிக்காக மலேசியா வந்துள்ள இசைஞானி இளையராஜா, நேற்று புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தம் சென்று கண்டார்.
மாஸ்ட்ரோ இளையராஜாவை வரவேற்றதில் பெரும் மகிழ்ச்சி என, பிரதமரும் தமது சமூக ஊடகப் பக்கங்களில் படங்களோடு பதிவிட்டுள்ளார்.
அச்சந்திப்பில் மலேசியா – இந்தியா இடையிலான கலை, கலாச்சார உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
மலேசியாவில் உள்ள இந்திய இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த இந்தியத் திரைப்படங்கள், இசைத் துறை தொடர்பான நினைவுகளையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர்.
மலேசியாவின் பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னங்களாகத் திகழும் கலை, கலாச்சாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்பதை, இளையராஜாவிடம் தாம் உறுதிக் கூறியதாகவும் பிரதமர் சொன்னார்.
அதே சமயம் இன்று புக்கிட் ஜாலிலில் நடைபெறவிருக்கும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இசைஞானியின் கலைப்பயணத்தில் இது மற்றொரு வரலாற்றுத் தருணமாக அமையட்டும் என அன்வார் வாழ்த்தினார்.