
புத்ராஜெயா, டிசம்பர்-1 – புத்ராஜெயாவின் Presint 14 பகுதியில் சொகுசு வீட்டொன்றில் கொள்ளையடித்து கொண்டிருந்த 3 ஆடவர்கள் போலீஸாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
வெள்ளிக்கிழமை மாலை 8.30 மணிக்கு நடந்த சோதனையில், இருவர் வீட்டுக்குள் விலை மதிப்புள்ள பொருட்களை தேடிக் கொண்டிருந்தபோதும், மூன்றாவது நபர் 300 மீட்டர் தொலைவில் காரில் காத்திருந்தபோதும் போலீஸிடம் சிக்கினர்.
வெளிநாட்டவர்களான அம்மூவருக்கும், கடந்த 3 மாதங்களில் Presint 11 மற்றும் 14 பகுதிகளில் நிகழ்ந்த குறைந்தது 9 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நவம்பர் 1-ஆம் தேதி Presint 11-ரில் தான் ஸ்ரீ பட்டம் கொண்ட ஒரு முன்னாள் அரசு ஊழியரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியும் அதிலடங்கும்.
புத்ராஜெயாவில் சொகுசு வீடுகளைக் குறி வைத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து இரவு 8 மணியிலிருந்து 10 மணிக்குள்ளாக அக்கும்பல் கைவரிசை காட்டி வந்துள்ளது.
வீடுகளின் பின்புறத்தில் உள்ள இரும்பு கம்பிகளை வெட்டி இக்கும்பல் உள்ளே நுழைகிறது.
கைதானவர்களிடமிருந்து போலீஸ் ரொக்கம், நகைகள், சொகுசு கை கடிகாரங்கள், மற்றும் Louis Vuitton, Gucci, Prada போன்ற பிரபல முத்திரைகளைக் கொண்ட கைப்பைகளையும் பறிமுதல் செய்துள்ளது.
அவர்கள் கொள்ளையிட்டதில் ஒவ்வொரு வீட்டிலும் RM20,000 முதல் RM50,000 வரை இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இவ்வாண்டு இதுவரையில் மட்டும் புத்ராஜெயா குடியிருப்புகளில் 26 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.



