
செப்பாங், ஜூன் 4 – புத்ரா பெர்டானாவில் உள்ள ஒரு வீட்டில், 1 வயது 11 மாதம் கொண்ட குழந்தையைக் கொலை செய்ததாக, அதன் பராமரிப்பாளரான 32 வயது பெண் மீது இன்று செப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
இரண்டு குழந்தைகளின் தாயான, நூர் சுஹய்டா ஜமாலுடின்( Nur Syuhaida Jamalluddin) இவ்வாண்டு மே 18 ஆம் தேதி பூச்சோங், தாமான் புத்ரா பெர்டானாவில் ( Taman Putra Perdana) இருக்கும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், காலை மணி 9.31 முதல் 11.24 வரை இந்தக் குற்றத்தை புரிந்ததாக மாஜிஸ்திரேட் கைருத்துல் அனிமா ஜெலானி( Khairatul Anima Jelani) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
டியா பலிஷா முஸ்தாகிம் ( Dhiya Falisha Mustaqim ) என்ற பெண் குழந்தையின் மரணத்திற்குக் காரணமாக நூர் சுஹாய்டா இருந்ததாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்கு குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் 302 பிரிவின் கீழ் இந்த குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் நபருக்கு குறைந்தது 12 பிரம்படியும் விதிக்கப்படலாம்.



