
தெலுக் இந்தான், ஜூலை.30-கடந்த ஞாயிற்றுக்கிழமை பேராக், தெலுக் இந்தான், Jalan Padang Tembakக்கில் இடைநிலைப் பள்ளியொன்றின் அருகே அபாயகரமான முறையில் வாகனமோட்டி பள்ளி மாணவிகள் இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக 28 வயதான Alex Robert மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருப்பினும், அவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால், அவரிடம் இருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இரு குற்ற்சாட்டுகள் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொண்டு வரப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், தூக்கு தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாமலும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். தூக்கு தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில், குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் துறை ஊழியரான அவ்வாடவர், அதே பகுதியில் போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனத்தைச் செலுத்தி பாதசாரி ஒருவருக்கு காயம் ஏற்படுத்தியதாக மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதே சம்பவத்தில் அவர் 50 வயதான ஏ. சுரேஷ் என்பவரை மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 30,000 முதல் 50,000 ரிங்கிட் வரையிலான அபராதம், மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஏழு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதி இழக்கச் செய்வது ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம்.
நான்காவது குற்றச்சாட்டிற்கு, 5,000 முதல் 10,000 ரிங்கிட் வரையிலான அபராதம் மற்றும் 12 மாதங்களுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். அவ்வழக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



