
ஸ்ரீ கெம்பாங்கான், செப்டம்பர் 13-மலேசிய இந்தியச் சமூகத்தினர் அரசாங்க வேலையில் சேருவதை ஊக்குவிக்கும் வகையில் ‘Program Jalinan Mesra – Aspirasi Kerjaya Perkhidmatan Awam’ என்ற விழிப்புணர்வு நிகழ்வு இன்று ஸ்ரீ கெம்பாங்கான், சுபாங் ஜெயா மாநகர மன்றமான MBSJ மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி, பூச்சோங் நாடாளுமன்ற சேவை மையம் மற்றும் புத்ராஜெயா இந்திய அரசுப் பணியாளர்கள் சங்கமான IMAIYAM இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் SPA, JPA, Kastam, JPJ, JTM/JPK மற்றும் EWRF ஆகிய அரசு நிறுவனங்கள் கலந்து கொண்டு வழிகாட்டுதல் சாவடிகளை அமைத்தன.
இந்நிகழ்வில் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் Wong Siew Ki, இமையம் அமைப்பின் தலைவர் Dr சதீஷ் குமார் முத்துசாமி மற்றும் KKI ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதிப் பிரதிநிதி ராஜசூரியா லெட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போதைய அரசுப் பணியாளர்களில் இந்தியர்களின் பங்களிப்பு சுமார் 3.5% அதாவது 46,000 பேர் மட்டுமே உள்ளது; இதில் பெரும்பான்மையோர் ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறையினராவர் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, கூட்டரசு, மாநில அரசு, ஊராட்சி மன்றங்கள் மற்றும் GLC நிறுவனங்களில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை 10% ஆக உயர்த்த சிறப்புப் பணிக்குழு அமைக்கக் கோரி பிரதமரிடம் வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தவிர, இலவச நிதியுதவிகளை விட நிலையான அரசு வேலைவாய்ப்புகளே சமுதாய வளர்ச்சிக்கு அவசியம் என நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் Wong Siew Ki, அரசுப் பணிகளில் சேர இந்தியர்கள் மேலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், அவர்களுக்கு இதுபோன்ற வழிகாட்டி முகாம்கள் பெரிதும் துணைப் புரியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்பார்த்ததை விட இன்றைய நிகழ்வுக்குப் பெரும் வரவேற்புக் கிடைத்ததாகக் குறிப்பிட்ட Dr சதீஷ் குமார், எதிர்காலத்தில் இளைஞர்கள் நேரடியாகச் சுயவிவரக் குறிப்புடன் (Resume) பங்கேற்கும் நேர்காணல் வேலைவாய்ப்பு முகாம் (Job Fair) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சொன்னார்.
மக்களுக்குப் பயனுள்ள இந்நிகழ்வை நடத்திய ஸ்ரீ கெம்பாங்கானைத் தேர்ந்தெடுத்ததற்காக்ஜ, ராஜசூரியா லெட்சுமணன் தெரிவித்தார்.
வழிகாட்டி முகாமில் பங்கேற்ற சிலரும் வணக்கம் மலேசியாவுடன் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
அரசுப் பணி குறித்த பல நல்ல தகவல்களை மக்களிடம் கொண்டுச் சேர்ப்பதில் இந்த பணி விழிப்புணர்வு முகாம் வெற்றியடைந்துள்ளது.



