Latestமலேசியா

புற்றுநோய் குழந்தைகளுக்காக RM13,400 திரட்டிய சகோதரிகள்; CCAM-க்கு நிதியாதரவு

கோலாலம்பூர், செப்டம்பர் 13 –குழந்தைப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, இரு பதின்ம வயது சகோதரிகள் மேற்கொண்ட நெகிழ்ச்சியான முயற்சியின் மூலம் 13,400 ரிங்கிட் நிதி திரட்டப்பட்டுள்ளது.

16 வயதான Erin Choong David மற்றும் அவரது 14 வயது சகோதரி Kaeylyn Choong David ஆகியோர் இந்த நிதி திரட்டும் முயற்சியை முன்னெடுத்தனர்.

திரட்டப்பட்ட தொகையில் 12,000 ரிங்கிட், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலேசியக் குழந்தைகளுக்கு உதவி வழங்கி வரும் Children’s Cancer Association of Malaysia – CCAM அமைப்புக்கும், மீதமுள்ள 1,400 ரிங்கிட் ‘Locks of Hope’ அமைப்புக்கும் வழங்கப்பட்டது.

கீமோதெரபி சிகிச்சையின் போது தலைமுடியை இழக்கும் குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இரு சகோதரிகளும் தங்களது 10 அங்குல தலைமுடியையும் தானமாக வழங்கினர்.

ஆரம்பத்தில் 3,500 ரிங்கிட் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உள்நாடு, வெளிநாடுகளைச் சேர்ந்த நன்கொடையாளர்களின் பேராதரவால் அந்தத் தொகை 13,400 ரிங்கிட்டாக உயர்ந்தது.

நிதி நெருக்கடி காரணமாக எந்தவொரு குழந்தையின் புற்றுநோய் சிகிச்சையும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் CCAM உறுதியாக இருப்பதாக அதன் தலைவர் லாவண்யா கணபதி தெரிவித்தார்.

Erin மற்றும் Kaeylyn ஆகியோர் இளம் வயதிலேயே வெளிப்படுத்திய கருணை, தாராள மனப்பான்மை, தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு தங்களை மிகவும் நெகிழ வைத்துள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

“சிறுவர்களுக்காகச் சிறுவர்களே முன்வந்துள்ள இந்த முயற்சி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது,” என்றும் லாவண்யா கூறினார்.

இதனிடையே, செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பாராட்டு நிகழ்வில், இரு சகோதரிகளும் CCAM மூலம் உதவி பெற்ற குழந்தைகள் மற்றும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை நேரில் சந்தித்து உரையாடினர்.

இதன்மூலம் தாங்கள் ஆதரவளிக்கத் தேர்ந்தெடுத்த நோக்கத்தின் பின்னால் இருக்கும் நிஜ வாழ்க்கைப் போராட்டங்களை நெருக்கமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு CCAM வழங்கி வரும் சேவைகளை அறிந்த பின்னரே, அந்த அமைப்புக்கு ஆதரவளிக்க முடிவு செய்ததாகவும் இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்குச் சகோதரிகள் பகிர்ந்த செய்தியும் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது.

“மனதைத் தளரவிடாதீர்கள்; நாங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்!”

தங்களது தலைமுடியை மட்டும் அல்லாமல், தங்களால் முடிந்த உதவியையும் பகிர்ந்த இந்தச் சகோதரிகளின் முயற்சி, சிறிய வயதிலும் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!