
சுபாங் ஜெயா, ஏப்ரல் 4 – புத்ரா ஹைட்ஸில் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக செரி மலேசியாவிலிருந்து 25 கார்கள் ஒப்படைப்பட்டதை சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ( Amirudin Shari ) இன்று நேரில் கண்டார்.
மீதமுள்ள 25 கார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை வழங்கப்படும் என அமிருடின் கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக பயன்படுத்துவதற்கு 50 கார்கள் வழங்கப்படுவதை Cherry உறுதியளித்திருந்தது. கார்கள் வழங்கப்படுவோருக்கு பெட்ரோல் வாங்குவதற்கான 100 ரிங்கிட் பற்றுச் சீட்டும் வழங்கப்பட்டது.
கார்சோம் ( Carsome ) 50 கார்களையும், காரோ (Carro )30 கார்களையும், கோகார் (GOCAR ) 20 கார்களையும், DRB-Hicom 62 கார்களையும் தற்காலிகமாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அமினுடின் கூறினார்.
தற்காலிகமாக கார் வழங்கும் திட்டத்தை சிலங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் இப் சே ஹான் ( Ng Sze Han) கையாள்வார். இந்த திட்டத்தின் கீழ் கார்களை பெறுவதற்காக 112 பேர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் எங்களிடம் கிட்டத்தட்ட 200 கார்கள் உள்ளன என்று அமிருடின் தெரிவித்தார். இதனிடையே புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலின் பல்நோக்கு மண்டபம் தற்காலிக நிவாரண மையமாக மாற்றப்பட்டுள்ளதால், அதிக பயன்பாட்டு பில்களுக்கு நிதியளிப்பதற்காக செரி நிறுவனம் , புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு 50,000 ரிங்கிட் நன்கொடை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.