
பூச்சோங், ஏப்ரல்-4- பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் வாடகைக்குத் தங்க ஏதுவாக, LPHS எனப்படும் சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம் 100 வீடுகளை வழங்க முன் வந்துள்ளது.
Skim SMART Sewa Selangor வாடகைத் திட்டத்தின் கீழ் அவ்வீடுகள் வழங்கப்படுகின்றன.
மத்திய அரசு வழங்கும் நன்கொடையிலிருந்து, அவற்றுக்கான பகுதிச் செலவை சிலாங்கூர் அரசு ஏற்றுக் கொள்ளுமென, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அனைத்தும் கைக் கூடி வந்தால் இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்களை அவ்வீடுகளில் தங்க வைக்கலாமென, அமிருடின் சொன்னார்.
LPHS தரப்புடன் அது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதும், முறைப்படி அறிவிக்கப்படுமென்றார் அவர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக நிவாரணமளிக்கும் பொருட்டு இயங்கி வரும் PPS மையங்களில் நெரிசலைக் குறைக்கவும் இந்நடவடிக்கை உதவுமென அமிருடின் கூறினார்.
இன்று காலை அந்த PPS மையங்களுக்கு வருகை மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் மந்திரி பெசார் பேசினார்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் உடனிருந்தார்.
புத்ரா ஹைட்ஸ் மசூதி மற்றும் கெமலியா மண்டபம் PPS மையங்களாக இயங்கி வரும் நிலையில், நேற்று வரை 157 குடும்பங்களைச் சேர்ந்த 630 பேர் அங்கு தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தாமான் ஹார்மோனியில் 85 வீடுகளைச் சேர்ந்தவர்கள் நேற்று தொடங்கி கட்டம் கட்டமாக தத்தம் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்