
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-6,
மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP ஒருமனதாக பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹடின் யாசினை பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆதரித்துள்ளது.
“அனைத்து இனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் முஹிடின்” எனக் கூறிய MIPP தலைவர் பி. புனிதன், 8-ஆவது பிரதமராக இருந்த போது கோவிட்-19 காலத்தில் உயிர்களை காப்பாற்றி, பொருளாதாரத்தை அவர் நிலைநிறுத்தியதை பாராட்டினார்.
“நாட்டை வழிநடத்தி மக்கள் நலன் காத்திட எங்களுக்கு மீண்டும் ‘ஆபா’ வே பிரதமராக வேண்டுமென, முஹிடின் பிரதமராக இருந்தபோது மக்களால் அவர் அறியப்பட்ட பெயரை புனிதன் குறிப்பிட்டார்.
பெட்டாலிங் ஜெயா, தோட்ட மாளிகையில் நேற்று நடைபெற்ற MIPP கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கொள்கையுரையாற்றிய போது, புனிதன் அவ்வாறு கூறினார்.
இதன் வழி, பெர்சாத்துவுக்கு பிறகு முஹிடினை 11-ஆவது பிரதமர் வேட்பாளராக வெளிப்படையாக ஆதரித்த இரண்டாவது கூட்டணிக் கட்சியாக MIPP திகழ்கிறது.
மற்றொரு முக்கியக் கட்சியான பாஸ், பிடிகொடுக்காமல் 16-ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றியப் பிறகே பிரதமர் யாரென்பது முடிவுச் செய்யப்படும் என கூறி வருகிறது.
இவ்வேளையில் மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக MIPP கட்சி தொடர்ந்து போராடும் என்றும், புறக்கணிக்கப்பட்டால் இனியும் இந்தியர்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் புனிதன் சூளுரைத்தார்.
பெரிக்காத்தான் கூட்டணியில் ஆகப் புதிய உறுப்புக் கட்சியாகவும், ஒரே இந்தியர் கட்சியாகவும் MIPP திகழ்வது குறிப்பிடத்தக்கது.



