
ஈப்போ, ஏப்ரல்-14, மத்திய பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களில் நேற்று மாலை பெய்த அடைமழை மற்றும் வீசிய புயல் காற்றில், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததோடு, மரங்களும் வேரோடு சாய்ந்தன.
மாலை 4.30 முதல் 6.30 மணி புயல் வீசியதில், மத்திய பேராக் மாவட்டத்தில் 6 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக, பேராக் பேரிடர் மேலாண்மை செயலகம் அறிக்கையொன்றில் கூறியது.
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களில் 7 குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்தன.
பேராக் தெங்காவில் பாதிக்கப்பட்ட கிராமங்களில், கம்போங் கா’ஜா, கம்போங் பாசீர் சாலாக், கம்போங் பூலாவ் பெசார், கம்போங் செபராங் பேராக் உள்ளிட்டவை அடங்கும்.
அங்கு குடியிருப்பாளர்களுக்கு உதவவும், சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் APM எனப்படும் பொது தற்காப்புப் படையைச் சேர்ந்த 25 பேர் களமிறக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக மத்திய பேராக்கின் தெலுக் இந்தானில் உள்ள சுங்கை ஜெஜாவி தேசியப் பள்ளியில் ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.
அதே சமயம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தாமான் காயா பல்நோக்கு மண்டபத்தில் ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.
எனினும் அச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
மொத்த சேத விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருவதாக அச்செயலகம் மேலும் கூறியது.