
கோலாலம்பூர், நவம்பர்-1, போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகை நிலுவையிலுள்ள வாகனமோட்டிகளுக்கு, கோலாலம்பூர் போலீஸ் 50 விழுக்காடு கழிவுச் சலுகையை அறிவித்துள்ளது.
நவம்பர் 5 செவ்வாய்க்கிழமை தொடங்கி நவம்பர் 9 சனிக்கிழமை வரையிலான காலக்கட்டத்திற்கு அச்சலுகை வழங்கப்படுகிறது.
ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் உள்ள கோலாலம்பூர் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமுலாக்கத் துறை தலைமையகத்தில், கழிவுச் சலுகையில் வாகனமோட்டிகள் அபராத பாக்கியைச் செலுத்தலாம்.
காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை அபராதங்களைச் செலுத்த 15 முகப்புகள் திறந்திருக்கும்.
எனினும், குறிப்பிட்ட சில சம்மன்களுக்கு அச்சலுகை பொருந்தாது.
விபத்துக்கள், வரிசையை முந்திச் சென்றது, அவசர பாதைகளின் முறையற்ற பயன்பாடு, சிவப்பு விளக்கை மீறியது, லாரிகள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.
நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புடைய சம்மன்கள், சாலைப் பாதுகாப்பு இயக்கங்களின் போது வெளியிடப்பட்ட சம்மன்கள், இரட்டை கோட்டில் வாகனமோட்டியது போன்ற குற்றங்களுக்கான சம்மன்களுக்கும் கழிவுக் கிடையாது.
ரொக்கமில்லா கட்டண முறையும் ஏற்றுக்கொள்ளப்படும்.