
குவந்தான், ஏப் 15 – முகநூலில் காணப்பட்ட இல்லாத முதலீட்டு திட்டத்தை நம்பி மோசடிக்கு உள்ளான 56 வயது பெண் குமாஸ்தா ஒருவர் 1.06 மில்லியன் ரிங்கிட்டை இழந்தார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி சமூக ஊடகங்களில் பங்கு முதலீட்டு விளம்பரத்தைப் கண்டு, அதில் பங்கேற்ற பின் இந்த மோசடிக்கு உள்ளாகியிருப்பது குறித்து புகார் செய்துள்ளதாக பஹாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
இந்த விளம்பரத்தில் ஆர்வமாக இருந்த அந்த பெண் , மேலும் ஒரு சந்தேக நபரிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் தகவலை பெறுவதற்கு முன்பு விளம்பர இணைப்பைக் கிளிக் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உள்ளூர் மற்றும் அமெரிக்க பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கும் குவாண்டம் எனப்படும் முதலீட்டு விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யுமாறு அந்த பெண்ணுக்கு சந்தேகப் பேர்வழி அறிவுறுத்தியுள்ளார்.
பிப்ரவரி 12ஆம்தேதி முதல் மார்ச் 26ஆம் தேதிவரை, அப்பெண் ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 18 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம்1,068,600 ரிங்கிட்டை செலுத்தியுள்ளார்.
எனினும் தாம் ஏமாற்றப்படுவதற்கு முன்னதாகவே அப்பெண் 20,000 ரிங்கிட்டை திரும்பப் பெற்றுள்ளார். பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட சேமிப்பு, இ.பி.எப் பணம் மற்றும் வங்கிக் கடன்களையும் பெற்று அந்த திட்டத்தில் முதலீடு செய்து அப்பெண் ஏமாந்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் 420 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக யஹ்யா ஒத்மான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.