
போர்ட்டிக்சன், செப்டம்பர் 4- போர்ட்டிக்சனில் கார் ஒன்று ஆற்றில் விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்ததோடு அவனது தங்கையும் பெற்றோரும் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டனர்.
இன்று காலை நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன் Tanjung Agas பாலத்திலுள்ள ஆற்றில் இந்த துயரம் சம்பவம் நிகழ்ந்தது. Nisan Teana கார் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் அக்கார் ஆற்றில் விழுந்தது குறித்து இன்று காலை மணி 11.44 அளவில் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்ற நீர் மீட்புக் குழுவினர் பிற்பகல் மணி 1.47 அளவில் சிறுவனின் உடலை மீட்டபோதிலும் அவன் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக அச்சிறுவனின் 8 வயது சகோதரி நண்பகல் மணி 1.28 அளவில் ஆற்றில் 3 மீட்டர் ஆழத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
40 வயது மதிக்கத்தக்க அவர்களது பெற்றோர்கள் பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர். அந்த காரை அச்சிறுவர்களின் தந்தை ஓட்டிச் சென்றதாகவும் அக்கார் இதர வாகனங்களுடன் விபத்தில் சம்பந்தப்படவில்லையென அறிவிக்கப்பட்டது.