Latestமலேசியா

போலி கடப்பிதழ் தயாரிக்கும் கும்பல் முறியடிப்பு; முக்கிய சந்தேக நபரின் e-wallet-ல் RM200,000 கண்டுபிடிப்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட்.14- நாட்டில் சுமார் ஓராண்டாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் போலிக் கடப்பிதழ்களைத் தயாரிக்கும் கும்பலின் நடவடிக்கை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் சுகாதாரப் பரிசோதனைகளைத் தவிர்ப்பதற்காக அக்கும்பல் தனது அந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

ஒரு வார கால கண்காணிப்பிற்குப் பின், நேற்று காலை ஏறக்குறைய 11.30 மணியளவில், கோலாலம்பூர், Kampung Batu, Taman Wahyuவில் உள்ள இரு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ​​29 மற்றும் 32 வயதுடைய இரண்டு வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். போலி கடப்பிதழ் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று இந்தோனேசியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைதான இரு வங்காளதேசிகளில் ஒருவர் அக்கும்பலின் மூளையாக இருந்து என சந்தேகிக்கப்படும் நிலையில், அவரிடம் கட்டுமானத் துறைக்கான தற்காலிக வேலை வாய்ப்பு வருகை அனுமதிச் சீட்டு இருந்தது. அவர் சுமார் ஒன்பது ஆண்டுகளாக மலேசியாவில் இருந்து வருகிறார். அவருக்குச் சொந்தமான e-wallet கணக்கில், சட்டவிரோத நடவடிக்கையிலிருந்து கிடைத்த வருமானம் என நம்பப்படும் 200,000 ரிங்கிட் இருந்ததும் கண்டறியப்பட்டது. மற்றொரு சந்தேக நபர் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தது தெரிய வந்ததாக Zakaria Shaaban கூறினார்.

அவர்களிடம் இருந்து அசலான இரு வங்காளதேசக் கடப்பிதழ்கள், போலியானவை என சந்தேகிக்கப்படும் ஒன்பது வங்காளதேசக் கடப்பிதழ்கள், மூன்று கைபேசிகள், 700 கடப்பிதழ் பக்கங்கள் மற்றும் போலியானவை என நம்பப்படும் பல்வேறு நாடுகளுக்கான 300 கடப்பிதழ் உறைகள், போலி முத்திரைகள், மடிக்கணினிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

வெளிநாட்டுத் தொழிலாளர் மருத்துவப் பரிசோதனை கண்காணிப்பு நிறுவனத்தின் சோதனைகளில் தோல்வியடைந்த அல்லது தகுதியற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களை இக்கும்பல் குறிவைத்ததாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 200 ரிங்கிட் முதல் 300 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கைதான நபர்களுக்கு எதிராக குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!