Latestமலேசியா

மதங்களை இழிவுப் படுத்தும் செயல்களை ஒற்றுமை அமைச்சு கடுமையாகக் கையாள வேண்டும்; டத்தோ என். சிவகுமார் வலியுறுத்து

கோலாலம்பூர், டிசம்பர்-16, மற்ற மதங்களை இழிவுப்படுத்தும் செயல்கள் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கையாள ஒற்றுமை அமைச்சு கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்.

தவறினால், காலங்காலமாக இனங்களுக்கு இடையில் கட்டிக் காக்கப்படும் ஒற்றுமை சீர் குலைந்து விடுமென, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என்.சிவகுமார் எச்சரித்தார்.

மக்களவையில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேட்ட கேள்விக்கான பதிலில், மேற்கண்ட பிரச்னையைக் கையாள நடப்பிலுள்ள சட்டங்களே போதுமானது என ஒற்றுமை அமைச்சின் துணையமைச்சர் கூறியிருந்தார்.

சட்டங்களும் தண்டனைகளும் இருப்பது உண்மைதான்; ஆனால் மதங்களை இழிவுப்படுத்தும் செயல்கள் தொடர்கதையாகி வருகின்றன.

ஏற்கனவே புகார் செய்யப்பட்ட பல சம்பவங்கள் என்னவாகின என்பது கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
எனவே, இவ்விவகாரத்தில் ஒற்றுமை அமைச்சின் தலையீடு அவசியமாகிறது.

அமுலாக்க நடவடிக்கைகளை உள்துறை அமைச்சின் பொறுப்புக்கே விட்டு விடாமல், ஒற்றுமை அமைச்சும் தன் பங்கை ஆற்ற வேண்டும்.

உதாரணத்திற்கு, இன மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல்கள் குறித்த புகார்களைப் பெறும் முறையை, அமைச்சு மேம்படுத்தலாம்.

புகார் செய்யும் வழிமுறைகள், புகார்களின் தன்மை, சட்ட நடவடிக்கைகள், ஆலோசகச் சேவை, விழிப்புணர்வுத் திட்டங்கள் போன்றவற்றை அது உட்படுத்தியிருக்க வேண்டுமென, சிவகுமார் பரிந்துரைத்தார்.

உள்துறை அமைச்சுடனான வியூக ஒத்துழைப்பின் வாயிலாக பிரத்தியேக செயல் திட்டக்மொன்றும் வரையப் பட வேண்டும்.

மதங்களுக்கு இடையிலான கல்வி மற்றும் எல்லை மீறும் சமூக ஊடகப் பதிவுகள் மீதான கண்காணிப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இன மத விஷயங்களில் தீவிரவாதப் போக்குடன் நடந்துக் கொள்ளக் கூடாது தான்; ஆனால், அதற்காக மக்களின் ஒற்றுமை பாதிக்கப்படும் போது நாம் மௌனம் காக்க முடியாது என டத்தோ சிவகுமார் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!