Latestமலேசியா

மனைவி எப்போதும் கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்; ஆய்வில் 60% மலேசியர்கள் கருத்து

கோலாலாம்பூர், மார்ச்-24-‘மனைவி எப்போதும் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என புதிய ஆய்வொன்றில் 60 விழுக்காட்டு மலேசியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Ipsos மற்றும் மகளிர் தலைமைத்துவத்திற்கான அனைத்துலக மையம் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், 66 விழுக்காட்டு இந்தோனேசியர்களும் அதே கருத்தை பகிருகின்றனர்.

அதேபோல், 58% மலேசியர்கள் மற்றும் 67% இந்தோனேசியர்கள் ‘குடும்ப முடிவுகளில் கணவருக்கே இறுதி அதிகாரம் உள்ளது’ எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஆய்வில் பங்கேற்ற 29 நாடுகளில் மலேசியா-இந்தோனேசியா என இவ்விரண்டு நாட்டு மக்கள் தான், குடும்பம் மற்றும் பாலின சமத்துவம் குறித்த பார்வையில் இன்னமும் பாரம்பரிய அல்லது பழையக் கண்ணோட்டத்தை கடைப்பிடிப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், நவீன சிந்தனைக்குப் பெயர்பெற்ற சிங்கப்பூரில் நிலைமை மாறுபட்டுள்ளது.

அங்கு 64% மக்கள் ‘பாலின சமத்துவ முயற்சிகள் போதுமான அளவுக்கு வந்துவிட்டன’ என தெரிவித்துள்ளனர்.

இது உலக சராசரியான 52 விழுக்காட்டை விட அதிகமாகும்.

இந்நிலையானது, சிங்கப்பூரில் ஒருவேளை பாலின சமத்துவம் அடையப்பட்டு விட்டதோ என்ற கருத்தை மேலோங்கச் செய்துள்ளது.

இவ்வேளையில், சமூகத்தில் ஆணாதிக்கம் அதிகம் காணப்படுவதாக பரவலாக விமர்சிக்கப்படும் ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில், ஆய்வு முடிவு சற்றே அதிர்ச்சியளிக்கிறது.

‘மனைவியர் கணவன்களுக்குக் கீழ்படிந்தே நடக்க வேண்டும்’ என்ற கருத்தை அங்கு முறையே 7% மற்றும் 9% என மிக மிகக் குறைவானவர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெரும்பாலும் பாரம்பரியமும் சமூகப் பின்புலமும் இந்த மனப்போக்குகளை உருவாக்கினாலும், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக மாற்றங்களே எதிர்காலத்தில் புதிய சமநிலையை உருவாக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!