
மன்னர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இவ்வார இறுதியில் பிரிட்டனில் பிரமாண்டமாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு, லண்டனிலும், விண்ட்சரிலும், அணிவகுப்புகள், ஒன்றுகூடல்கள், விருந்துபசரிப்புகள் என களைகட்டியுள்ளன.
கடந்த 70 ஆண்டுகளில், பிரிட்டன் தலைநகரில் நடைபெறவுள்ள மிகப் பெரிய அரச சடங்கு அதுவாகும்.
அந்த பிரமாண்டமான விழாவில், கலந்து கொள்ள, 203 உலக நாடுகளை சேர்ந்த ஈராயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதும், சில நாடுகளுக்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யா, பெலாருஸ், ஈரான், மியன்மார், சிரியா, ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா ஆகிய ஏழு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
பிரிட்டனுடன் சுமூகமான உறவை கொண்டிருக்காதது அல்லது அனைத்துலக தடைகளை எதிர்நோக்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதே சமயம், வட கொரியா மற்றும் நிசாராகுவா (Nicaragua) ஆகிய நாடுகளின் தலைவர்களை விடுத்து உயர் தூதர்களுக்கு, முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்து கோடி முதல் பத்து கோடி யூரோ செலவில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மன்னர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை, உலகம் முழுவதுமுள்ள மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.