
மும்பை, ஜனவரி 21 – கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென புகுந்த நபரால் கடந்த 16-ம் தேதி சைப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார்.
6 முறை கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவர், 2 அறுவை சிகிச்சைக்குப் பின் மும்பை மருத்துவமனையிலிருந்து இன்று பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில், அறுவைச் சிகிச்சையின் மூலம் சைஃப் அலிகானின் முதுகில் இருந்து அகற்றப்பட்ட இரண்டரை இன்ச் அளவிலான கூர்மையான கத்தியின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே, இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விஜய் தாஸ் எனும் முஹமட் ஷரிபுல் என்ற வங்கதேசத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரன் என்று நம்பப்படும் ஒருவனை மும்பை போலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.