கோலாலம்பூர், ஜனவரி-9, 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டை விளம்பரப்படுத்தும் வீடியோவில் மசூதி இடம் பெறாததை யாரும் அரசியாலாக்க வேண்டாம்.
சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த பிரச்சார வீடியோவின் நோக்கமே, மலேசியாவின் கலை, பண்பாடு, சுற்றுலா அம்சங்களைப் பிரபலப்படுத்துவது தான்; மாறாக இன-மதக் கூறுகளை முன்னிலைப்படுத்துவதல்ல என்றார் அவர்.
எனவே, அரசியல் ஆதாயத்திற்காக அவ்வீடியோவை சர்ச்சையாக்கி மக்களின் நல்லிணக்கத்தைக் கெடுக்க வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.
அது வெறும் 41 வினாடி அறிமுக வீடியோ தான்; எல்லாவற்றையும் திணித்து அதனை வெளியிட முடியாது.
தனித்துவமிக்க வேலைப்பாடுகளைக் கொண்ட மசூதிகள் விரைவில் வெளியிடப்படவிருக்கும் மேலும் விரிவான வீடியோவில் இடம் பெற்றுள்ளன என அமைச்சர் சொன்னார்.
அந்த விளம்பர வீடியோவில் தேவாலயம், கோவில் போன்ற மற்ற வழிபாட்டுத் தலங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மை மக்களான முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவு முன்னதாக சாடியிருந்தது.
கூட்டரசின் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாத்தின் சின்னமாக விளங்கும் மசூதிகளின் அழகை முதன்மைப்படுத்த அவ்வீடியோ தவறி விட்டதாக பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவும் குறைக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் சுற்றுலா அமைச்சின் அதிகாரப்பூர்வ facebook, you tube பக்கங்களில் அவ்வீடியோவை தற்போது காணவில்லை எனக் கூறப்படுகிறது.