
குவாலா திரங்கானு, ஜூலை-13- ஜோகூரில் பள்ளி வளாகமொன்றில் மதுபானங்கள் ஏலத்தில் விற்கப்பட்டதாகக் கூறி வைரலாகியுள்ள சம்பவத்தை, போலீஸ் விசாரணைக்கே விட்டு விடுவதாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறியுள்ளார்.
அதே சமயம் கல்வி நிறுவனங்களில் ஒழுக்கக்கேடுகள் அல்லது விதிமீறல்கள் நிகழ்வதை அமைச்சு பொறுத்துக் கொள்ளாது.
சம்பந்தப்பட்டோர் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். அந்த மதுபான ஏல விற்பனையின் போது சண்டை நிகழ்ந்தது குறித்தும் அதிகாரத் தரப்பு விசாரித்து வருகிறது.
விசாரணையை அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தொடர்ந்து உறுதிச் செய்வோம் என்றும் ஃபாட்லீனா சொன்னார்.
பொந்தியானில் உள்ள ஓர் ஆரம்பப் பள்ளி மண்டபத்தில் அந்த மதுபான ஏலம் நடைபெற்ற வீடியோக்கள் முன்னதாக வைரலாகி பொது மக்கள் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தன.
ஏலத்தின் போது அங்கிருந்தவர்கள் இடையே சண்டை மூண்டதும் குறிப்பிடத்தக்கது. பிள்ளைகள் கல்வி கற்கும் இடத்தில் இதுபோன்ற செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும், சம்பந்தப்பட்டோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறி பல்வேறு தரப்புகள் வலியுறுத்தியுள்ளன.