
ஜோகூர் பாரு, ஏப் 15 – ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 54-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி அண்மையில் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அஸ்மான் ஹாஷிம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றபோது மாணவர்கள் தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி அந்த விளையாட்டரங்கத்தை அதிர வைத்தனர்.
இப்போட்டிக்கான தீபச் சுடரை ஏற்றி போட்டியை சுல்தானா ரொஹாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாறன் இராமன் அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தார்.
நம் மாணவர்கள் விளையாட்டுத்துறையில் மிளிர்வதோடு எதிர்காலத்தில் உலகளவில் நம் நாட்டைப் பிரதிநிதித்துப் போட்டியிடும் வல்லமை பெற்றிருக்க வேண்டுமென அவர் தமதுரையில் வலியுறுத்தியதோடு நன்கொடையும் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பள்ளியின் இளஞ்சிட்டுகள் ஜிம்ராமா நடனத்தை வழங்கி நிகழ்விற்கு மெரூகூட்டிய வேளையில் பள்ளியின் இசைக்குழுவினரும் தங்களின் படைப்பினையும் வழங்கி பாராட்டுகளைப் பெற்றனர்.
புறப்பாடத் துணைத்தலைமையாசிரியை திருமதி.மு.சந்திரமோகினி அவர்களின் வழிகாட்டலில் பொறுப்பாசிரியர்கள் திருமதி மா.ரேவதி மற்றும் திருமதி ந.மாரியம்மா அவர்களின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக இப்போட்டி நடந்தேறியது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் அயராத முயற்சியினால் இவ்வாண்டும் வெளியரங்கில் நடந்தேறிய இப்போட்டி விளையாட்டினைக் கண்டு தாம் உளம் மகிழ்வதாகக் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் கால் பதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வாண்டு பள்ளியின் சிறந்த விளையாட்டு வீரராகச் செல்வன் ஹவின்ராஜ் மற்றும் விளையாட்டு வீரங்கனையாகச் செல்வி சித்தேஸ்வரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜொகூர் மாநில பாலர் பள்ளிகள், ஆரம்பப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநரும் மற்றும் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளருமான இரா.இரவிச்சந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகைளை வழங்கினார்.