மாதத்திற்கு RM5,000 vs RM32,000: உயர் சம்பளம் காரணமாக சிங்கப்பூரை நோக்கி படையெடுக்கும் மலேசிய மருத்துவர்கள்

கோலாலம்பூர், மார்ச்-30-சம்பள வேறுபாடு, நிரந்தர பணி போன்றவையே மலேசிய மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி படையெடுக்க முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன.
சிங்கப்பூரில், ஒரு மருத்துவரின் ஆரம்ப ஆண்டு சம்பளம் சுமார் S$110,000, அதாவது RM385,000 வரை செல்கிறது. மாதத்திற்கு சுமார் RM32,000, 6 மடங்கு அதிகமாகும். அதோடு நிரந்தர பணி அது.
ஆனால் மலேசியாவில், அரசாங்க மருத்துவர்களின் ஆரம்ப சம்பளமே மாதத்திற்கு சுமார் RM5,000 மட்டுமே. அது மட்டுமன்றி ஒப்பந்த பணி வாய்ப்பே அது. இது மிகப் பெரிய வித்தியாசமாகும்.
இந்த சம்பள இடைவெளி காரணமாக, பல பயிற்சி மருத்துவர்கள் சிங்கப்பூரை நோக்கி நகர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் கூட, housemanship கட்டாயப் பயிற்சிக்கு 5,000 இடங்களை சுகாதார அமைச்சான KKM ஒதுக்கிய நிலையில், 529 பேர் அதாவது வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே பதிந்துகொண்டனர்.
இது பொது சுகாதார துறையில் பணியாளர் பற்றாக்குறையை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குவதாக MBSB Research ஆய்வு கூறுகிறது.
தவிர, சிங்கப்பூர் அரசாங்கம், மருத்துவ பட்டதாரிகளை முன்கூட்டியே ஆட்சேர்ப்பு செய்து, உயர்ந்த சம்பளம், நிரந்தர வேலை மற்றும் சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குகிறது.
இதனால் மருத்துவ பட்டதாரிகள் இயல்பாகவே அங்கு ஈர்க்கப்பட்டு விடுகின்றனர்.
இந்த ‘brain drain’ அதாவது திறமையாளர்களின் வெளியேற்றம் இப்படியே தொடர்ந்தால், மலேசியாவின் சுகாதார அமைப்பு எதிர்காலத்தில் கடுமையான அழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



