கோலாலம்பூர், செப்டம்பர்-11 – இரு ஜப்பானிய ஆடவர்களிடம் கும்பலாகக் கொள்ளையிட்டதன் பேரில் ஆப்ரிக்க நாட்டவர்கள் மூவர் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
ஆகஸ்ட் 9-ம் தேதி Midvalley, The Garden Mall பேரங்காடியில் அக்குற்றத்தைப் புரிந்ததாக, சியாரா லியோன் நாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்களும், லைபீரியாவைச் சேர்ந்த ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் மீதான முதல் குற்றச்சாட்டுக்கு, அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அதே சமயம் 1959 குடிநுழைவுத் துறைச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், 10,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.
மலேசியாவில் தங்கியிருக்க முறையான பயணப் பத்திரத்தைக் கொண்டிருக்கவில்லை என, அம்மூவரில் ஒருவர் மீது மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்னொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.