
கோலாலம்பூர், ஜனவரி-22-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைய ம.இ.கா செய்த விண்ணப்பத்திற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது.
இனி, முடிவு ம.இ.காவின் கையில் தான் உள்ளது என, முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.
“கடந்தாண்டு இறுதியிலேயே அவர்களின் விண்ணப்பதை ஏற்றுக் கொண்டு விட்டோம். இப்போது இறுதி முடிவை ம.இகாவின் தலைமைத்துவம் தான் எடுக்க வேண்டும்” என, இந்திய ஊடகவியலாளர்களுடன் நேற்றைய சந்திப்பில் முஹிடின் கூறினார்.
தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனுடன் தாம் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட முஹிடின், விக்னேஸ்வரனுடன் அவ்வப்போது அவரது வீட்டில் தமது வீட்டிலும் சந்தித்துள்ளதாகவும் கூறினார். அவ்வகையில் ம.இ.கா நல்ல முடிவை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
ம.இ.கா PN-ல் சேர்ந்தால், ஓட்டுமொத்தமாக அனைத்து இந்திய கட்சிகளும் PN பக்கம் வந்துவிடும். அச்சமயத்தில் இந்தியர்களுக்கு வேறு தேர்வும் இருக்காது. ஆகையால் PN-க்கு இந்திய வாக்காளர்ளின் வலுவான ஆதரவுக் கிடைக்கும்.
இந்தியர் பிரதிநிதித்துவமும் மேம்படும் என்றார் அவர்.
முஹிடின் கருத்துக்கு ம.இ.கா இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.
ஆனால் ம.இ.கா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் முன்பாக வெளியாகிருந்தது.
நேற்று முன்தினம் நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாத நிலையில் ம.இ.கா இன்னும் அக்கூட்டணியில்தான் இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சம்ரி அப்துல் காடிர் கூறியிருந்தார்.
எது எப்படி இருந்தாலும் தைப்பூசத்திற்கு பிறகே ம.இ.காவின் நிலைப்பாடு குறித்து தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



