கோலாலம்பூர், அக்டோபர்-26, பள்ளி மாணவிகள் பாஜூ கூரோங் சீருடை அணிந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் முகநூல் பக்கம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC உறுதியளித்தது.
அந்த facebook பக்கத்தின் நடவடிக்கைக் குறித்து X தள பயனர் ஒருவர் தெரிவித்த புகாருக்கு பதிலளிக்கையில், MCMC அவ்வாறு கூறியது.
அந்த தனிப்பட்ட முகநூல் குழுவில் (private FB group) 6,100 பேருக்கும் மேல் உறுப்பினர்களாக உள்ளது தெரிய வந்துள்ளது.
மூன்றாண்டுகளாக அந்த முகநூல் பக்கத்தில் பள்ளி மாணவிகளின் தனிப்பட்ட புகைப்படங்கள் பகிரப்பட்டு வந்திருப்பது குறித்து, புகார்தாரரான அந்த X பயனர் ஆச்சரியமும் அதிர்ச்சியும் தெரிவித்தார்.
அக்குழுவில் உறுப்பியம் பெற்றுள்ள 6,100 பேரும் சிறார் மீது பாலுணர்வு நாட்டம் கொண்டவர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அவரின் கருத்தை ஆமோதித்த வலைத்தளவாசிகளும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.