
மார்ச்-9-நாட்டில் உள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வலியுறுத்தி, சிலாங்கூர், பூச்சோங் தாமான் கின்றாராவில் நேற்று இந்திய சமூக ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
“முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒன்றுபடும் பல்லின மக்களின் குரல்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை Persatuan Kebajikan Integriti Persahabatan Nasional அல்லது PKIPN என்ற அரசு சாரா அமைப்பு நடத்தியது.
பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரச்னைகள் எழுந்தாள், மத்திய மாநில அரசுகள் அவற்றை பரிவுடன் அணுகி சுமூகமாக தீர்வு காண வேண்டும் என, அவ்வமைப்பின் நிறுவனர் மாஸ்டர் ஜோசப் பிரகாஷ் வலியுறுத்தினார்.
அதே சமயம், இந்திய வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்; பிரதமரே இதனை நேரடியாக கண்காணித்து உதவிட வேண்டும் என்றார் அவர்.
இவ்வேளையில், அண்மையில் பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள முனீஸ்வரர் கோவில் தொடர்பில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் பேசிய தொடர்பில் நாடளாவிய நிலையில் போலீஸ் புகார் செய்யப்பட்டு வருவதாகவும் ஜோசப் கூறினார்.
மலேசிய சமூக நீதிக் குரல் நல அமைப்பின் தலைவர் உலக நாதன் முத்தையா, சமுத்திர இயக்கத்தின் தலைவர் ஜீவஜெயசீலன், சமூக ஆர்வலர் மாக்மாண்டின் குமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.



