
கோலாலம்பூர், மார்ச்-14 – முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்களின் நில பிரச்னைகளைத் தீர்க்க புதிய வழிகாட்டுதல்கள் தயாராகி வருகின்றன.
இந்த வழிகாட்டுதல்கள் விரைவிலேயே ஊராட்சி மன்றங்களுக்கான தேசிய மன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் ஏற்கனவே அமைச்சரவைக்கு இத்திட்டம் பற்றி விளக்கியுள்ளதாகவும், அதன் அடிப்படை அமைப்பு தயாராக உள்ளதாகவும் அந்தோணி லோக் கூறினார்.
இந்த உத்தேசத் திட்டத்தின் மூலம் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பிற முஸ்லீம் அல்லாத வழிபாட்டு தலங்கள் தொடர்பான நீண்டகால நில பிரச்னைகளை படிப்படியாக தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
அதாவது, சட்டபூர்வமாக்கப்படக் கூடிய இடங்கள் சட்டபூர்வமாக்கப்படும்; அதுவே பொருத்தமற்ற இடங்களில் உள்ள வழிபாட்டு தலங்கள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட உதவி செய்யப்படும் என்றார் அவர்.
பல மாநிலங்களில் இத்தகைய நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இருப்பதால்
இது ஒரு பெரிய வேலை என்பதையும் லோக் ஒப்புக் கொண்டார்.
புதிய வழிகாட்டுதல்கள் அமுல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களும் அதனை பின்பற்றியாக வேண்டும்.
அனுமதி இல்லாத கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தொடர்பான விவகாரம் அண்மைய காலமாக இன மற்றும் மத பதற்றத்தை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற உத்தேசத் தீர்வுகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.



