
மூவார், மார்ச்-30- எஸ். பி. எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் ஒருவன் நேற்று மூவார் ,பாரிட் ஜாவா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் காத்திருந்தபோது பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தான்.
மாலை மணி 6.51-க்கு நிகழ்ந்த அந்த சம்பவத்தில் குடும்பத்தில் ஒரே பிள்ளையான 18 வயதான அந்த மாணவன் கடுமையான காயங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தான்.
விபத்து நடந்த இடத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதில்
பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் திரும்பிக் கொண்டிருந்த பேருந்தின் பக்கவாட்டில் மோதி கவிழ்ந்த காட்சி பதிவாகியிருந்தது.
ஜாலான் பாரிட் யூசுப்பில் அமைந்துள்ள, Ad-Diniah Parit Subari சமய இடைநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் அந்த இடத்திற்கு அருகே தான் வேலை செய்யும் இடத்திலுள்ள தனது பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.
பத்து பஹாட்டிலிருந்து முவார் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் நிற்பதற்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையின் மூலம் தெரியவருவதாக முவார் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜிஸ் ( Raiz Mukhliz Azman Aziz ) தெரிவித்தார்.



