மெய்நிகர் உலகில் தமிழ்: புதிய பொருளாதாரக் கதவுகளைத் திறக்கும்! – ரமணன் ராமகிருஷ்ணன்

கோலாலம்பூர், பிப் 21 —
உலகமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆதிக்கம் செலுத்தும் இந்த நவீன யுகத்தில், தமிழ் மொழி என்பது வெறும் இலக்கிய அடையாளம் மட்டுமல்ல, அது உலகளாவிய வேலைச் சந்தையில் மலேசிய இந்தியர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய ‘டிஜிட்டல் வல்லமை’ (Digital Empowerment) என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இன்று அனுசரிக்கப்படும் உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு,”பன்மொழிக் கல்வியில் இளைஞர்களின் குரல்” என்ற கருப்பொருளை ‘யுனெஸ்கோ’ (UNESCO) அறிவித்துள்ளது.
“நமது இளைஞர்கள் இன்று ‘மொழி 4.0’ (Language 4.0) புரட்சியின் முன்னோடிகளாகத் திகழ வேண்டும். தமிழை வெறும் பேச்சு மொழியாக மட்டும் பார்க்காமல், அதை ‘மெஷின் லேர்னிங்’ (Machine Learning) மற்றும் தரவு அறிவியலில் (Data Science) ஒரு முதன்மை மொழியாக மாற்ற வேண்டும். 2026-இல் தமிழைத் தொழில்நுட்பத்தோடு பிணைப்பதே நாம் நமது தாய்மொழிக்குச் செய்யும் ஆகச்சிறந்த தொண்டு” என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அதே சமயத்தில்,
மனிதவள அமைச்சின் புதிய இலக்குகளைச் சுட்டிக்காட்டிய அவர், “ஒரு பணியாளருக்குத் தனது தாய்மொழியில் உள்ள ஆளுமை, அவரை அனைத்துலக அரங்கில் ஒரு ‘உயர் மதிப்புமிக்க வல்லுநராக’ (Premium Talent) மாற்றுகிறது. பன்மொழி அறிவு என்பது வெறும் தொடர்பு கருவி அல்ல; அது வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். நமது வேர் சார்ந்த அறிவுதான் நம்மை உலக அரங்கில் தனித்துவமாகக் காட்டும்,” எனவும் ரமணன் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ‘மலேசியா மடாணி’ தத்துவத்தின் அடிப்படையில், “நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை பிளாக்செயினில் (Blockchain) பாதுகாப்பதும், நவீன தொழில்நுட்பம் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதும் காலத்தின் கட்டாயம்,” என்று அவர் கூறினார்.
“தமிழ் என்பது நம் ஆன்மா; அது நம்மை வழிநடத்தும் வெளிச்சம். தொழில்நுட்ப உலகை நாம் ஆள வேண்டுமானால், நமது மொழியைத் துணையாகக் கொண்டு முன்னேறுவோம். இளைய தலைமுறையினர் தமிழைத் தொழில்நுட்ப மொழியாக (Tech-Language) முன்னெடுக்க வேண்டும்,” என்று டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.



