ஜோகூர் பாரு, அக்டோபர்-9, மலேசிய-சிங்கப்பூர் எல்லைக் கடந்த பயணங்களுக்கான MyRentas QR குறியீட்டு முறையின் பரீட்சார்த்த சோதனை, நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுல்தான் இஸ்கண்டார் கட்டடம் (BSI) மற்றும் சுல்தான் அபு பாக்கார் வளாகத்தில் (KSAB) குடிநுழைவு பரிசோதனைகளை விரைவுப்படுத்துவதில் அப்புதியச் சோதனை முறையின் செயல்திறனை மதிப்பீடு செய்ய, உள்துறை அமைச்சுக்கும் குடிநுழைவுத் துறைக்கும் இந்த கால நீட்டிப்பு துணைப் புரியும்.
பரீட்சார்த்த முறையில் அச்செயலி ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இதுவரை கிட்டத்தட்ட 20 லட்சம் பயணங்களை அது பதிவுச் செய்துள்ளது.
இதையடுத்து, மலேசியா சிங்கப்பூர் இடையிலான தரைவழிப் பாதையில், பயணிகள் பேருந்துகளுக்கு காத்திருக்கும் நேரம் 120 நிமிடங்களிலிருந்து வெறும் 15 நிமிடங்களுக்குக் குறைந்துள்ளது.
அதே சமயம் ஒரு பயணியின் புறப்பாடு நேரத்தை 30 முதல் 45 வினாடிகளிலிருந்து 5 வினாடிகளுக்கும் கீழ் MyRentas குறைத்துள்ளதாக, Jati Jana நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Azril Rizal Abdullah கூறினார்.
MyRentas செயலியானது, ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூருக்கான மலேசியர்களின் தினசரி பயணத்தை ஒழுங்குப்படுத்தும் குடிநுழைவுத் துறையின் டிஜிட்டல் உருமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.