கோலாலம்பூர், செப்டம்பர் 9 – எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி மலேசிய இந்தியர் காங்கிரஸ் எனும் ம.இ.கா கட்சியின் 78ஆவது பேராளர் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று அறிவித்தார்.
ம.இ.கா கட்சியின் 78ஆவது பேராளர் மாநாடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடங்கி மதியம் 6.30 மணி வரை ஷா ஆலம் IDCC அரங்கில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி (Dato Seri Ahmad Zahid Hamidi) துவக்கி வைப்பார் என டத்தோ ஸ்ரீ எம் சரவணன் கூறினார்.
ஒரே நாளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.
மாநில பேரவைகள் போன்று கட்சியின் தலைமைத்துவதற்கு பிளவுபடாத ஆதரவு வழங்குதல் மற்றும் 3R தொடர்பிலான விவகாரங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என ம.இ.காவின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் இம்மாநாட்டில் கொள்கை உரையாற்றவுள்ளார்.
அந்த கொள்கை உரை மீதியிலான விவாதமாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், 1480 பேராளர்களுடன் ஏறக்குறைய 170க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.