
ஜோகூர் பாரு, மே-24 – பரபரப்புடன் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சித் தேர்தலில் துணைத் தலைவராக நூருல் இசா அன்வார் வெற்றிப் பெற்றார்.
இதன் மூலம் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற வரவாற்றையும் அவர் படைத்துள்ளார்.
நூருல் இசாவுக்கு 9,803 வாக்குகள் கிடைத்த வேளை, நடப்புத் துணைத் தலைவரான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி வெறும் 3,866 வாக்குகளை மட்டுமே பெற்று, பதவியைத் தற்காக்கத் தவறினார்.
துணைத் தலைவர் தேர்தலில் ரஃபிசி தோற்பது இது இரண்டாவது முறையாகும்.
2018-ல் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலியிடம் தோற்ற ரஃபிசி, 2022-ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலை வீழ்த்தினார்.
இவ்வேளையில் 4 உதவித் தலைவர் பதவிகளுக்கானத் தேர்தலில், டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சரான ரமணன் 5,895 வாக்குகளைப் பெற்ற வேளை, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி 7,955 வாக்குகளுடன் முதலாவதாக வந்தார்.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் 5,889 வாக்குகளுடன் மூன்றாவதாகவும், சான் லீ காங் 5,757 வாக்குகளுடன் நான்காவதாகவும் வந்தனர்.
ரமணனைத் தவிர மற்ற மூவரும் நடப்பு உதவித் தலைவர்கள் ஆவர்.
ரமணனின் அதிரடி வெற்றியால், மற்றோர் உதவித் தலைவரான இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தோல்வியுற்றார்.
20 மத்தியத் தலைமைத்துவ மன்ற உறுப்பினர்களுக்கானத் தேர்தலில் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் அதிக வாக்குகளுடன் முதலாவதாக வந்தார்.
குணராஜ் ஜோர்ஜ், A. குமரேசன், G. சிவமலர் உள்ளிட்டோரும் அம்மன்ற உறுப்பினர்களாக வெற்றிப் பெற்றனர்.
இளைஞர் பிரிவுத் தலைவராக காமில் முனிம் போட்டியின்றி வென்ற வேளை, மகளிர் பிரிவுத் தலைவியாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் வாகை சூடினார்.
நேற்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற பி.கே.ஆர் கட்சியின் ஆண்டுப் பொதுப் பேரவைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை, தேர்தல் குழுத் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr. சாலிஹா முஸ்தாஃபா அறிவித்தார்.
கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்தார்.